ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவும் இஸ்ரேலும் நிபந்தனையற்ற முறையில் சரணடைந்து இழப்பீடு வழங்கினால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார். தனது தந்தை அலி கமெனிக்குப் பிறகு பதவியேற்றுள்ள அவர், பல்வேறு நாடுகள் முன்வைத்த போர்நிறுத்த ஆலோசனைகளைத் திட்டவட்டமாக நிராகரித்துவிட்டார்.

தற்போது போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால், உலக நாடுகளுக்கான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய தாக்குதல்களில் மொஜ்தபா கமெனி காயமடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவர் வெளியிட்டுள்ள இந்த முதல் முக்கிய ஆணை உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மறுபுறம், அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் போரை முடிக்க எடுக்கப்படும் தூதரக முயற்சிகளை நிராகரித்துள்ளதால், இந்த மோதல் மேலும் தீவிரமடைந்து உலகளாவிய பணவீக்கத்தை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.