அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கடும் வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியிலும், ஈரானின் இஸ்லாமிய ஆட்சி முறை சிதையாமல் உறுதியுடன் இருப்பதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 18 நாட்களைக் கடந்தும் நீடிக்கும் இந்தப் போரில், அமெரிக்கா எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல் திணறி வருவதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அதிநவீன ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அஞ்சாமல் ஈரான் ராணுவம் போர்க்களத்தில் தீவிரம் காட்டி வருகிறது. “எங்கள் மக்கள் ரத்தம் சிந்தத் தயார், ஆனால் ஒரு அங்குல நிலத்தைக் கூட அமெரிக்காவிடம் ஒப்படைக்க மாட்டோம்” என்று ஈரான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் போரின் ஒரு பகுதியாக, ஈரானால் முடக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணை இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் சரக்குக் கப்பல்கள் நடுவழியில் சிக்கியுள்ளன. ஹார்முஸ் நீரிணையை மீட்டெடுக்க அமெரிக்காவுக்குப் பிற நாடுகளின் ஆதரவு கிடைக்காதது அந்த நாட்டுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியை இலக்கு வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். இருப்பினும், ஈரானின் ஒட்டுமொத்த பாதுகாப்பு மற்றும் அரசியல் கட்டமைப்பு சிதையவில்லை என ‘வாஷிங்டன் போஸ்ட்’ அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்புகளின் தகவல்படி, ஈரானின் ராணுவ பலம் ஓரளவுக்குக் குறைந்திருந்தாலும், அதன் அதிகாரப் பகிர்வு இன்னும் வலுவாகவே உள்ளது.
மறைந்த தலைவர் காமேனி தனது வாழ்நாளில் உருவாக்கிய பாதுகாப்பு மற்றும் மதத் தலைமைகளுக்கு இடையிலான சமநிலை, தற்போது போர்ச் சூழலில் நாட்டை உறுதி குலையாமல் காத்து வருகிறது. தலைமை மாறினாலும், ஈரானின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் தற்போதைய பாதுகாப்பு அமைப்பின் பிடியிலேயே உள்ளது. இதனால் ஈரான் விரைவில் சரணடையும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாகி உள்ளது. மேலும் சர்வதேச நாடுகளின் ஆதரவு இன்றி, ஈரானுடன் மல்லுக்கட்டுவது அமெரிக்காவுக்குத் தானே வைத்துக்கொண்ட ‘தூக்குக் கயிறு’ போல மாறி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
