பெலகாவி மாவட்டம் அதானி நகரைச் சேர்ந்த 34 வயதுப் பெண் சுஜாதா பவார் என்பவருக்கும் ஹருகேரியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதன் பின்னர் தனது சொந்த ஊருக்குத் திரும்பிய சுஜாதா பவார் அங்குத் தனியாக வசித்து வந்துள்ளார். அந்தச் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த குமார் ஹல்லப்பா ஹவல்தார் என்ற 30 வயது வாலிபருடன் சுஜாதாவுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்தப் பழக்கம் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் பல்வேறு இடங்களுக்குச் சென்று தனிமையில் இருந்து வந்துள்ளனர். சுஜாதா பவாருக்குச் சொந்தமான வீடு மற்றும் தோட்டத்தைக் கைப்பற்றும் நோக்கத்தில் இருந்த குமார் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்துள்ளார்.

ஆனால் அதற்கு முன்னதாக சுஜாதாவின் சொத்துக்களைத் தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு குமார் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதற்குச் சுஜாதா ஒப்புக்கொண்ட போதிலும் திருமணம் செய்து கொள்ள இன்னும் சில காலம் ஆகட்டும் என்று கூறிச் சொத்தை மாற்றிக் கொடுக்காமல் காலந்தாழ்த்தி வந்துள்ளார். சொத்து கைக்கு வராததால் ஆத்திரமடைந்த குமார் சுஜாதாவைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று சுஜாதாவைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற குமார் அருகில் இருந்த ஒரு கரும்புத் தோட்டத்திற்குள் வைத்துத் துணியால் முகத்தை மூடிக்கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். தோட்டத்து உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில் அதானி காவல்துறையினர் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து நடத்திய தீவிர விசாரணையில் சொத்துக்காகக் காதலியைக் கொலை செய்த குமாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.