புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணியில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரிக்கு ‘மாநில அந்தஸ்து’ வழங்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கையை பாஜக ஏற்க மறுப்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற முதல்வர் ரங்கசாமி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயுடன் ரங்கசாமி தொலைபேசியில் பேசியதாக வெளியாகி வரும் தகவல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
குறிப்பாக, தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசுவதற்காகப் புதுச்சேரிக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவைச் சந்திக்க முதல்வர் ரங்கசாமி ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரைச் சந்திக்காமல் புறக்கணித்த முதல்வர், தனது கோரிக்கையில் உறுதியாக இருக்கிறார். ஒருவேளை பாஜக இறங்கி வராதபட்சத்தில், விஜய்யின் தவெக-வுடன் கூட்டணி அமைத்துப் புதுச்சேரி தேர்தலைச் சந்திக்க அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் அரசியல் மாற்றத்தால் புதுச்சேரியில் பாஜக தரப்பு மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளது.
