கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது மாணவி ஒருவருக்கு சமூக வலைதளத்தின் வாயிலாகக் கலபுரகியைச் சேர்ந்த சிவானந்தா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிவானந்தா கர்நாடக ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வருகிறார். முதலில் நண்பர்களாகப் பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்கத் தொடங்கியுள்ளனர்.

அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய சிவானந்தா அவருடன் பல்வேறு இடங்களுக்குச் சென்றதோடு தங்கும் விடுதிகளிலும் தங்கியுள்ளார். இந்த நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுச் சண்டை வந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சிவானந்தா அந்த மாணவியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறித் தனது காதலை முறித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி அவரிடம் தொடர்ந்து பேசியபோதும் அவரது அலைபேசி எண் மற்றும் சமூக வலைதளக் கணக்குகளைச் சிவானந்தா முடக்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறி வருத்தப்பட்டுள்ளார். இதையடுத்து மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிவானந்தாவின் வீட்டிற்குச் சென்று முறையிட்டுள்ளனர். அப்போது சிவானந்தாவின் பெற்றோர் மாணவியின் குடும்பத்தினரைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் திருமணத்திற்குச் சம்மதிக்க மறுத்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட மாணவி பெலகாவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர் சிவானந்தா மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.