நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் வடமாநில மாணவியை, தேர்வில் வெற்றி பெற வைப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவக் கல்லூரியில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஓம் பிரகாஷ், தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்த 22 வயது மாணவியை உதவி செய்வதாகக் கூறித் தனியாக அழைத்துப்பேசி வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு இது குறித்துப் பேசுவதற்காக ஊட்டியில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு மாணவியை வரவழைத்த அந்த மருத்துவர், அவருக்குப் போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு அதனைத் தனது அலைபேசியில் காணொலியாகவும் எடுத்து வைத்திருந்தது உறுதி செய்யப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ஊட்டி அனைத்து மகளிர் காவல்துறையினர் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஓம் பிரகாஷைக் கைது செய்தனர். பின்னர் அவர் ஊட்டியில் உள்ள கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
விசாரணையில் கைதான மருத்துவருக்கு ஏற்கனவே 2 திருமணங்கள் ஆகி மனைவிகள் பிரிந்து சென்ற நிலையில், அவர் ஊட்டியில் தனியாக வசித்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர் ஏற்கனவே வேறு ஏதேனும் மாணவிகளிடம் இதுபோன்று அத்துமீறல்களில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்திலேயே மாணவிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
