தெலுங்கானா மாநிலம் மேட்சல் மாவட்டம் அன்னோஜிகுடா பகுதியைச் சேர்ந்த மனோகர் என்ற இளைஞர், காதலித்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்ய மறுத்ததால் அவருக்குத் தனது ரத்தத்தை ஊசி மூலம் செலுத்திய அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்த மனோகருக்குத் தனது பெற்றோர் வழியாக எய்ட்ஸ் நோய் பாதிப்பு இருந்தது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை இதே நோயால் உயிரிழந்த நிலையில், மனோகருக்கும் அந்தப் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே தனது உறவினரான இளம்பெண்ணை மனோகர் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்குத் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.
ஆனால் மனோகரின் நோய் பாதிப்பு குறித்துத் தெரிந்ததும் இளம்பெண்ணின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தினர். அந்தப் பெண்ணும் மனோகருடன் பேசுவதைத் தவிர்த்து வந்ததால் அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார். தன்னைத் திருமணம் செய்ய மறுக்கும் காதலிக்கும் இதே நோயைப் பரப்பினால் அவரை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்றும், அதன் பிறகு தமக்கே திருமணம் செய்து வைப்பார்கள் என்றும் மனோகர் விபரீதமாக எண்ணியுள்ளார்.
இதற்காகத் திட்டமிட்டு ஊசி ஒன்றை வாங்கிய அவர், அதில் தனது ரத்தத்தை ஏற்றிச் சென்று இளம்பெண்ணிடம் வலுக்கட்டாயமாகச் செலுத்திவிட்டுத் தப்பிச் சென்றார். மறுநாள் அந்தப் பெண்ணுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, ஊசி செலுத்தப்பட்ட இடத்தில் கருப்பு நிறத் தழும்பு இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
இது குறித்துத் தீவிர விசாரணை நடத்திய போது மனோகரின் கொடூரச் செயல் வெளிச்சத்திற்கு வந்தது. இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் மனோகரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
