ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சி, எதிர்பாராத விதமாக மரண வீட்டில் முடிந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொண்ட லலித் சிங் (41) என்பவர், உறவினர்களுடன் மிகுந்த உற்சாகமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரசகுல்லாவை அவர் சாப்பிட்டபோது, எதிர்பாராத விதமாக அது அவரது தொண்டையில் சிக்கிக் கொண்டது.

​இனிப்பு தொண்டையை அடைத்ததால் மூச்சு விட முடியாமல் லலித் சிங் அங்கேயே துடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் ரசகுல்லாவை வெளியே எடுக்கப் போராடியும் பலன் கிடைக்கவில்லை. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் ரசகுல்லா அவரது மூச்சுக் குழாயை முழுமையாக அடைத்ததால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளனர். மகிழ்ச்சியாகத் தொடங்கிய திருமண விழா, இந்தத் துயரச் சம்பவத்தால் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.