உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கிருஷ்ணா குமார் ராஜ்பார் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த கிருஷ்ணா குமார், அவர் கர்ப்பமான போது வேலை கிடைத்தவுடன் திருமணம் செய்வதாகக் கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை கொடுத்துள்ளார்.
இதனை நம்பி அந்த பெண்ணும் மாத்திரைகளை உட்கொண்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சமீபத்தில் கிருஷ்ணா குமாருக்கு இந்தியக் கடற்படையில் வேலை கிடைத்துள்ளது. வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டபோது, கிருஷ்ணா குமார் அவரை ஏமாற்றித் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து நியாயம் கேட்கச் சென்ற அந்த பெண்ணை கிருஷ்ணாவின் குடும்பத்தினர் கடுமையாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விரட்டியுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் வன்கொடுமை, மோசடி மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணா குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
