மகாராஷ்டிரா மாநிலம் புனே, டிகி (Dighi) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், மார்ச் 7-ம் தேதி நடந்த இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. ஒரு தாய் தனது சில மாதமே ஆன குழந்தையுடன் லிப்ட்டில் ஏறியுள்ளார். லிப்ட் தளம் வந்தவுடன் கதவுகள் திறக்க, எதிர்பாராத விதமாக அந்தக் குழந்தை தனது பிஞ்சுக்கையை கதவுகளுக்கு இடையேயான இடைவெளியில் வைத்துவிட்டது. அடுத்த நொடியே கதவுகள் மூடிக்கொள்ள, குழந்தையின் கை உள்ளே மாட்டிக்கொண்டது. இதைக் கண்ட தாய் மற்றும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு குழந்தையைக் காப்பாற்ற முயன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி பார்ப்பவர்களைக் கலங்கச் செய்கிறது.
சுமார் சில நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்தின் போது, குழந்தையின் கைக்கு காயம் ஏற்படாமல் இருக்க அங்கிருந்தவர்கள் மிகவும் கவனமாகச் செயல்பட்டனர். ஒருவழியாகப் பெரும் முயற்சிக்குப் பிறகு குழந்தையின் கை பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், “குழந்தைகளை லிப்ட்டில் அழைத்துச் செல்லும்போது ஒரு வினாடி கூட கவனக்குறைவாக இருக்கக் கூடாது” என நெட்டிசன்கள் எச்சரித்து வருகின்றனர். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் லிப்ட்கள், சிறிய கவனக்குறைவால் எவ்வளவு பெரிய விபத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி!
