இந்திய கிரிக்கெட் அணி சமீபகாலமாக அபாரமான வெற்றிகளைக் குவித்து வருகிறது. ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று அசத்திய இந்தியா, தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் தனது ஆதிக்கத்தைத் தொடர்கிறது.
மறுபுறம், 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் பாகிஸ்தான் அணி கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மாற்றமாக, அந்த அணிக்கு 2017-ல் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
38 வயதான சர்பராஸ் அகமது, பாகிஸ்தான் அணிக்காக 100-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். இவரது தலைமையில்தான் 2006-ல் அண்டர்-19 உலகக் கோப்பையையும், 2017-ல் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் ட்ராபியையும் பாகிஸ்தான் வென்றது. நீண்ட நாட்களாக அணியில் இடம் கிடைக்காமல் இருந்த அவர், மார்ச் 15 அன்று தனது ஓய்வு முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
54 டெஸ்ட், 117 ஒருநாள் மற்றும் 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ், ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தனது முத்திரையைப் பதித்துவிட்டு விடைபெறுகிறார்.
