தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 15) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய ‘செக்’ வைத்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாகத் திமுக தரப்பிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தங்கள் கட்சிக்கு இந்த முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் எனத் திட்டவட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், வேல்முருகனின் இந்தக் கோரிக்கைக்குத் திமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு சாதகமான பதிலும் வரவில்லை.

​திமுகவின் மௌனத்தால் அதிருப்தியில் இருக்கும் வேல்முருகன், “திமுகவின் பதிலைப் பொறுத்து மிக விரைவில் எங்கள் அடுத்தக்கட்ட நிலைப்பாட்டை அறிவிப்போம்” என அதிரடியாகப் பேசியுள்ளார். அதுமட்டுமின்றி, “தேவைப்பட்டால் திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து மறுபரிசீலனை செய்வோம்” என அவர் விடுத்துள்ள எச்சரிக்கை, திமுக முகாமில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட இந்த முட்டல் மோதலால், வேல்முருகன் கூட்டணியை விட்டு வெளியேறத் தயாராகிவிட்டாரா? என்ற கேள்வி இப்போது தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.