2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக அரசியல் களம் முன்பை விட இப்போது ரத்தமும் சதையுமாக சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதன் உச்சகட்டமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக டெல்லி தரப்பிலிருந்து விஜய்க்கு மிக பிரம்மாண்டமான ‘ஆஃபர்’ கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, 80 தொகுதிகள் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்றால் விஜய்க்குத் ‘துணை முதல்வர்’ பதவி என்பதுதான் அந்த மெகா டீல். இந்த அதிரடித் திட்டத்திற்குத் தவெகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஏற்கனவே பச்சைக்கொடி காட்டிவிட்டதாகத் தெரிகிறது.
இதுமட்டுமல்லாமல், தவெகவின் முக்கியத் தூண்களாகக் கருதப்படும் ஆதவ் அர்ஜுனா மற்றும் KAS போன்றவர்களுக்கு மத்திய அரசில் அல்லது வரவிருக்கும் கூட்டணியில் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக ரகசியமாக நடந்து வந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான அதிரடி அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை இந்தக் கூட்டணி உறுதியானால், அது திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளுக்கும் மிகப்பெரிய சவாலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
