ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் நேரலை நேர்காணலில் இருந்தபோதே அதிபரால் அவசரமாக அழைக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் (63), வாஷிங்டனில் உள்ள நிதித்துறை அலுவலகத்தில் ‘ஸ்கை நியூஸ்’ (Sky News) ஊடகத்திற்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். சுமார் 13 நிமிடங்கள் நேர்காணல் நடந்த நிலையில், திடீரென அறைக்குள் நுழைந்த அதிகாரி ஒருவர், “அதிபர் உங்களை உடனடியாக அழைக்கிறார்” என்ற செய்தியைத் தெரிவித்தார்.
செய்தியைக் கேட்ட அடுத்த கணமே, தனது மைக்கை கழற்றிவிட்டு அங்கிருந்து வெளியேறிய அமைச்சர் பெசன்ட், நேராக வெள்ளை மாளிகையில் அவசரகால ஆலோசனை அறைக்குச் சென்றார். சுமார் இரண்டு மணி நேர ஆலோசனைக்குப் பிறகு திரும்பிய அவர், “அதிபர் மிகவும் உற்சாகமான மனநிலையில் உள்ளார்; ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே வெற்றிகரமாக முன்னேறி வருகிறது” என்று தெரிவித்தார்.
Watch the moment a call from the White House situation room interrupts U.S. treasury secretary Scott Bessent’s interview with Sky’s @WilfredFrost ⬇️ pic.twitter.com/4XNNvRuHJX
— Sky News (@SkyNews) March 12, 2026
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி, ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ என்ற பெயரில் இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதற்குக் கடும் பதிலடி கொடுத்து வரும் ஈரான், வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் எரிசக்தி மையங்களைக் குறிவைத்துத் தாக்கி வருகிறது.
இந்த மோதலால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (பகுதியில் ஈரான் நெருக்கடி கொடுத்து வருவதால், சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படலாம் எனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாகவே, அதிபர் ட்ரம்ப் தனது நிதி அமைச்சருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
