மகாராஷ்டிர மாநிலம் தானே பகுதியில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘டாடா சியாரா’ (Tata Sierra) காரை ஓட்டிப் பார்த்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி ஆழமுள்ள கட்டுமானப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த மூன்று பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். அதாவது தானே பஞ்ச்பகாடி பகுதியில் உள்ள ஹெரிடேஜ் மோட்டார்ஸ் ஷோரூமில் இருந்து, செவ்வாய்க்கிழமை மாலை இந்த டெஸ்ட் டிரைவ் மேற்கொள்ளப்பட்டது. இரவு 7:30 மணியளவில் உட்சவ் ஹோட்டல் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
View this post on Instagram
காரை ஓட்டிச் சென்ற பிரியா குமாரி (36) என்பவர், திடீரென வேகத்தை அதிகரித்தபோது கார் கட்டுப்பாடு இழந்ததாகக் கூறப்படுகிறது. தாறுமாறாக ஓடிய கார், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஆட்டோ மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில் அங்கிருந்த ஏகத்வா குழுமத்தின் கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் பாதுகாப்பு வேலிகளை உடைத்துக் கொண்டு, சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் கார் தலைக்குப்புற விழுந்தது.
இந்த விபத்தின் போது காரில் பிரியா குமாரி, அவரது உறவினர் மிதிலேஷ் பாஸ்வான் (48) மற்றும் கார் விற்பனை நிலைய ஊழியர் சேத்தன் தேஷ்முக் (30) ஆகியோர் இருந்தனர். பெரும் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், சிதைந்த காரில் சிக்கியிருந்த மூவரையும் மீட்டனர். தகவல் அறிந்து வந்த தானே மாநகராட்சி பேரிடர் மேலாண்மைக் குழுவினர் அவர்களை கௌசல்யா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரியா குமாரிக்கு தலை மற்றும் இடுப்புப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்ற இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். “கார் மிக உயரத்தில் இருந்து விழுந்த போதிலும், அதில் இருந்த 6 ஏர்பேக்குகளும் (Airbags) சரியான நேரத்தில் விரிவடைந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி பலத்த சேதமடைந்தாலும், காரின் உட்புறக் கட்டமைப்பு (Cabin) பெரிய அளவில் சிதையாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. டாடா நிறுவனத்தின் பாதுகாப்புத் தரத்திற்கு இந்த விபத்து ஒரு நேரடிச் சான்றாக அமைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன. இருப்பினும், இந்த விபத்து ஓட்டுநரின் தவறால் நடந்ததா அல்லது காரில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறால் நடந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
