மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரபன் லோதி என்பவரது மனைவி சவிதா. இந்த தம்பதிக்கு 4 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை இல்லை என்ற காரணத்தால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்திரபன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து சவிதா தனது நான்கு மகள்களையும் தனியாக வளர்த்து வந்ததோடு தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயமும் செய்து வந்துள்ளார். இருப்பினும் குடும்பத்தை வழிநடத்தப் போதிய வருமானம் இல்லாததாலும் தனியாகக் குழந்தைகளை வளர்ப்பதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவும் சவிதா மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று சவிதா தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துத் தகவல் அறிந்து வந்த அக்கம் பக்கத்தினர் அவரது குழந்தைகளைத் தேடியபோது கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் நான்கு பெண் குழந்தைகளும் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது.
ஏழு வயது முதல் ஐந்து மாதக் குழந்தை வரை நான்கு மகள்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு சவிதா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் இந்தத் துயரமான சம்பவத்திற்கு நிதி நெருக்கடி காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
