ஈரான் – இஸ்ரேல் போர் சூழலால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து, தமிழகத்தில் பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அடுத்த 8 வாரங்களுக்குத் தேவையான எரிபொருள் இருப்பு உள்ளதாக மத்திய அரசு உறுதியளித்த போதிலும், பீதியடைந்த வாகன ஓட்டிகள் பெட்ரோல் மற்றும் டீசலை நிரப்ப ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூழலில், நபர் ஒருவர் 20 லிட்டர் தண்ணீர் கேனில் பெட்ரோல் வாங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுபாதுகாப்பு காரணங்களுக்காகவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் வாட்டர் பாட்டில் அல்லது கேன்களில் பெட்ரோல் வழங்க அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது.

இத்தகைய விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, பெட்ரோல் பங்குகளில் எப்படி தாராளமாக தண்ணீர் கேன்களில் எரிபொருள் வழங்கப்படுகிறது என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது. விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் பெட்ரோல் நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் அச்சத்தைப் போக்க அரசு முன்வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

தற்போது நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகள் தேவையற்ற பதற்றத்தை உருவாக்குவதுடன், பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளன. எனவே, எரிபொருள் இருப்பு குறித்த சரியான தகவலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கேன் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை செய்வதைத் தடுக்க கடுமையான கண்காணிப்பை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சப்பட வேண்டாம் என்றும் சமூக வலைதளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.