மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களுக்கும், ஹார்முஸ் ஜலசந்தியில் கடல்சார் வர்த்தகத்திற்குத் தடைகளை ஏற்படுத்துவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பெரும் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மீது ஈரான் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களைக் கண்டிக்கும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில், “மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கி கடல்சார் வர்த்தகத்தில் தலையிடும் செயல்களை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்” என்று கடுமையாக வலியுறுத்தப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற வாக்கெடுப்பில், இந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. உலக நாடுகளின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தகத் தொடர்புகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த வாக்கெடுப்பில் சீனா கலந்துகொள்ளாமல் புறக்கணித்தது. மேலும், ரஷ்யா இந்தத் தீர்மானத்தைத் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த மாறுபட்ட நிலைப்பாடுகள், மத்திய கிழக்கு விவகாரத்தில் உலக நாடுகள் இரு துருவங்களாகப் பிரிந்துள்ளதைக் காட்டுகிறது.
இந்தத் தீர்மானத்தின் மூலம் ஈரான் மீது சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியான வர்த்தகம் உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படுவதால், அங்கு நிலவும் பதற்றம் உலக நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
