அமெரிக்காவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருக்கும் இந்தியரான பத்ரேஷ் குமார் சேதன்பாய் படேலைப் பிடிக்க அந்நாட்டுப் புலனாய்வு அமைப்பான FBI தீவிர முயற்சி எடுத்து வருகிறது. 2015-ஆம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள ஒரு டோனட்ஸ் உணவகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, இந்தியா செல்வது தொடர்பான வாக்குவாதத்தில் தனது மனைவி பாலக்கை பத்ரேஷ் குமார் கொலை செய்தார்.
தற்போது FBI-இன் ‘மிகவும் தேடப்படும் 10 குற்றவாளிகள்’ பட்டியலில் இருக்கும் இவரைப் பற்றித் தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வெகுமதித் தொகை, 2.5 லட்சம்டாலரிலிருந்து 1 மில்லியன் டாலராக (சுமார் 9.18 கோடி ரூபாய்) தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில் இவரைப் பற்றி 300-க்கும் மேற்பட்ட துப்புகள் கிடைத்தும், போலீசாரால் இன்னும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தனது மனைவியைக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிய பத்ரேஷ் குமார், இதுவரை பிடிபடாமல் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இவரைப் பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குபவர்களுக்கு இந்த மிகப்பெரிய தொகை வெகுமதியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் அறிவித்துள்ளனர்.
