பொதுவாக பேருந்து அல்லது ரயில்களில் பயணம் செய்யும்போது சக பயணிகள் சிலர் மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் அதிக சத்தத்துடன் வீடியோக்களைப் பார்ப்பது நமக்கு எரிச்சலைத் தரும். ஆனால், அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தில் இருந்து தம்பா நகருக்குப் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், இது போன்ற செயலில் ஈடுபட்ட பெண் ஒருவருக்குக் கடுமையான பாடம் புகட்டப்பட்டுள்ளது.
அந்தப் பெண் ஹெட்ஃபோன்கள் அணியாமல் சத்தமாக வீடியோ பார்த்ததால், ஊழியர்கள் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊழியர்கள், போலீசாரை வரவழைத்து அவரை விமானத்திலிருந்து பலவந்தமாகஇறக்கிவிட்டனர். அவர் வெளியேற்றப்பட்டபோது சக பயணிகள் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
“நான் வெறும் 30 விநாடிகள் மட்டுமே வீடியோ பார்த்தேன், அதற்காகவா என்னை இறக்கி விடுகிறீர்கள்?” என்று அந்தப் பெண் கேள்வி எழுப்பும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால், சமீபத்தில் யுனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது ‘பயணம் செய்ய அனுமதி மறுத்தல்’ கொள்கையைப் புதுப்பித்துள்ளன.
இதன்படி, சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்களை விமானத்திலிருந்து வெளியேற்றஅந்நிறுவனங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. இந்த விதிமுறையானது மற்றவர்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பயணிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
விமான நிறுவனங்களின் புதிய வழிகாட்டுதல்களின்படி, ஹெட்ஃபோன்கள் பயன்படுத்தாமல் ஆடியோ அல்லது வீடியோக்களை இயக்குவது, விமான ஊழியர்களிடம் தவறாக நடந்துகொள்வது அல்லது வெறும் காலில் பயணம் செய்வது போன்ற செயல்கள் விமானத்திலிருந்து வெளியேற்றப்படக் காரணமான விதிமீறல்களாகக் கருதப்படுகின்றன.
இனிவரும் காலங்களில் பொது இடங்களில் பயணம் செய்யும்போது நமது சுதந்திரம் அடுத்தவர்களின் அமைதியைக் கெடுக்காமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது.
