சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் இணையப் பாதுகாப்பு குறித்த கவலைகள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் செயலியில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது, அவர்கள் யாருடன் பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் எளிதாகக் கண்காணிக்கும் வகையில் “Parent Controlled” என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பிலிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த இந்த அதிரடி முடிவை மெட்டா எடுத்துள்ளது.
இந்த புதிய அப்டேட்டின் படி, ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றங்கள் இருக்கும் என்றும், விரைவில் இது படிப்படியாக அனைத்துப் பயனர்களுக்கும் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் தவறான நபர்களுடன் தொடர்பு கொள்வதைத் தடுக்க முடியும் என்பது ஒருபுறம் இருந்தாலும், இது தனிமனித சுதந்திரத்தைப் பாதிக்குமா என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. எது எப்படியோ, பிள்ளைகளின் கையில் போனை கொடுத்துவிட்டு நிம்மதி இழந்த பெற்றோர்களுக்கு மெட்டாவின் இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிம்மதிப் பெருமூச்சாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமே இல்லை!
