உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள வினோதமான ‘ஹாரர்’ (Horror) தீம் உணவகத்தில், பேய் வேடமிட்ட ஊழியரைப் பார்த்து சிறுவன் ஒருவன் பயந்து அழுத வீடியோ சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக உணவகங்கள் வெறும் உணவு வழங்கும் இடமாக மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு வினோதமான அலங்காரங்களுடன் செயல்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வாரணாசியில் உள்ள ‘கன்கால் ஹாரர் ரெஸ்டாரண்ட்’ என்ற உணவகம் முற்றிலும் திகில் நிறைந்த சூழலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் வெளியாகி 2 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள அந்த வீடியோவில், ஒரு தம்பதி தங்களது சிறிய மகனுடன் உணவருந்திக் கொண்டிருக்கின்றனர். அந்த உணவகத்தின் சுவர்கள் கறுப்பு நிறத்தில் பூசப்பட்டு, எலும்புக்கூடுகள் மற்றும் பேய் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
View this post on Instagram
அப்போது, நீண்ட கறுப்பு அங்கியை அணிந்து, மண்டை ஓடு மாலையுடன் பேய் வேடமிட்ட ஊழியர் ஒருவர் அந்தச் சிறுவனின் அருகே வருகிறார். முதலில் சிறுவனுக்குக் கைகொடுக்க முயலும் அந்த ஊழியர், சிறுவன் நெருங்கி வந்தவுடன் திடீரென பயமுறுத்தும் வகையில் சைகை செய்கிறார். இதனால் நிலைதடுமாறிய அந்தச் சிறுவன், பயத்தில் அலறித் துடித்துத் தனது தாயின் பின்னால் ஒளிந்துகொண்டு அழத் தொடங்குகிறான். இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்:
இத்தகைய இடங்களுக்குச் சிறுவர்களை அழைத்துச் செல்வது அவர்களது மனநலனைப் பாதிக்கும்” என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். “குழந்தையின் பசியே அடங்கிப் போயிருக்கும்” என மற்றொருவர் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார். பெரியவர்களுக்கு இது பொழுதுபோக்காக இருக்கலாம், ஆனால் குழந்தைகளுக்கு இது வாழ்நாள் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இத்தகைய இடங்களுக்குக் குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் நவீன கால உணவக கலாச்சாரம் என்ற பெயரில், குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் இத்தகைய இடங்களுக்கு அழைத்துச் செல்வது சரியா என்ற கேள்வியையும் இந்தச் சம்பவம் எழுப்பியுள்ளது.
