முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சமீபத்தில் திமுகவில் இணைந்ததை அடுத்து, அவரது இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் மீண்டும் இடம்பெற்றிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, திமுகவில் இணைந்த தருணத்தில் தனது காரில் இருந்த ஜெயலலிதாவின் படத்தை அகற்றிவிட்டு முதல்வர் ஸ்டாலினின் புகைப்படத்தை வைத்தது அதிமுக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தற்போது அவரது வீட்டில் மீண்டும் ஜெயலலிதாவின் படம் காட்சியளிப்பது, அவர் மீதான விமர்சனங்களைச் சமாளிப்பதற்கான ஒரு முயற்சியாகவோ அல்லது தனது பழைய அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் நோக்கமாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓ.பி.எஸ்-ஸின் இந்தச் செயலுக்கு அதிமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும் “அரசியல் ஆதாயத்திற்காகக் கொள்கைகளைத் துறந்துவிட்டு, தற்போது மீண்டும் ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துவது தொண்டர்களை ஏமாற்றும் செயல்” என்று அதிமுக நிர்வாகிகள் சாடியுள்ளனர். அம்மாவின் விசுவாசியாகத் தன்னைக் காட்டிக்கொண்டவர், தற்போது திமுகவில் ஐக்கியமான பிறகு அவரது உருவப்படத்தைப் பயன்படுத்துவது முறையற்றது என அக்கட்சி விமர்சித்துள்ளது.
