காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பீரன் சிங் எங்டி (81), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அஸ்ஸாம் மாநிலத்தின் திப்பு லோக்சபா தொகுதியிலிருந்து 1970-களிலிருந்து தொடர்ச்சியாக 5 முறை எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்தப் பிராந்தியத்தின் அசைக்க முடியாத தலைவராகத் திகழ்ந்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் அமைச்சரவையில் பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை இணையமைச்சராகப் பணியாற்றி, நிர்வாகத் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். இவரது மறைவு அசாம் மாநில அரசியலுக்கும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது. இவரது மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
