ஈரான் – அமெரிக்கா போர் பதற்றத்தால் இந்தியாவிற்கு வரும் எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அதன் நேரடி பாதிப்பு இப்போது தமிழகத்தின் சமையல் கூடங்களில் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகத் தமிழகத்தில் உள்ள பல உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இந்த எரிபொருள் தட்டுப்பாடு சாமானியர்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைவரையும் கலக்கமடையச் செய்துள்ளது.

​இதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள ஐடி (IT) ஊழியர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் (PG) இன்று ஒரு அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிலிண்டர் தட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு, விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது என்று விடுதி உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. அன்றாடத் தேவைகளுக்கே சிலிண்டர் கிடைப்பது அரிதாகியுள்ளதால், இந்த இக்கட்டான முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.