உலக அளவில் முதன்மையான சமூக வலைத்தள செயலியாகத் திகழும் வாட்ஸ் அப் நிறுவனம் தனது பயனர்களைக் கவரும் வகையில் அவ்வப்போது புதிய மாற்றங்களைச் செய்து வருகிறது. அந்த வகையில் சந்தையில் நிலவும் போட்டியைச் சமாளிக்க வாட்ஸ் அப் பிளஸ் என்ற பெயரில் புதிய கட்டண சேவையை அறிமுகம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் பயனர்களுக்குப் பல்வேறு பிரீமியம் வசதிகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பயனர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயலியின் தோற்றம் மற்றும் முதன்மை வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம். மேலும் செயலியின் அடையாளச் சின்னத்தையும் மாற்றி அமைக்கும் வசதி இதில் இடம் பெற உள்ளது.

வாட்ஸ் அப் பிளஸ் சந்தாதாரர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரும் வசதிகளை விட கூடுதல் வசதிகள் கிடைக்க உள்ளன. முக்கியமாகத் தற்போது மூன்று உரையாடல்களை மட்டுமே மேல் பகுதியில் நிலைநிறுத்த முடியும் என்ற நிலை மாறி அதனை இருபது வரை உயர்த்திக் கொள்ளும் வசதி வழங்கப்படும்.

அதேபோல் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து வரும் அழைப்புகளை எளிதில் கண்டறியும் வகையில் தனித்தனி ரிங்டோன்களை அமைக்கும் புதிய வசதியும் இதில் சேர்க்கப்பட உள்ளது. இந்தப் புதிய சேவையை அறிமுகம் செய்வதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.