இந்தியா-பாகிஸ்தான் போரைத் தாம் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறிவருவது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாகப் பிரதமர் மோடி ஏன் அமைதியாக இருக்கிறார் என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, “எனக்குத் தெரிந்த உண்மைகளை வெளியிட்டால் மோடி பிரதமர் பதவியையே ராஜினாமா செய்ய வேண்டியிருக்கும்” என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.

அதாவது இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரைத் தமது தலையீட்டால்தான் தடுத்து நிறுத்தியதாகவும், இல்லையெனில் அது அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என்றும் டிரம்ப் அண்மையில் கூறிவந்தார். இந்தப் பதிவுகள் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றன. இருப்பினும், இதற்கு இந்திய மத்திய அரசு தரப்பில் எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.

இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட எதிர்க்கட்சிகள், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், பாஜகவின் மூத்த தலைவரும், தனது கட்சித் தலைமையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருப்பவருமான சுப்ரமணியன் சுவாமி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியாவின் மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மோடி, அமெரிக்க அதிபர் டிரம்பைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறார்? என்னிடம் பேசிய அமெரிக்கர்கள், மோடி ஏதோ ஒரு விஷயத்தில் டிரம்ப்புடன் சமரசம் செய்துகொண்டுள்ளதாகக் கூறுகிறார்கள். எனக்குத் தெரிந்த பல அதிர்ச்சிகரமான தகவல்களை இதுவரை நான் வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அவற்றை நான் வெளியிட்டால், அது பிரதமர் மோடி தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் உள்ளேயே மூத்த தலைவர் ஒருவர், பிரதமர் மோடியின் பதவியையே குறிவைக்கும் வகையில் எச்சரிக்கை விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப் பிறகு, கட்சியின் மூத்த தலைவரே இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருப்பது, ஆளும் தரப்பில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து அரசுத் தரப்பிலோ அல்லது பாஜக தலைமை தரப்பிலோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.