தலைநகர் டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள பூங்காவிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது தோழியுடன் சென்ற மணிப்பூர் மாநில இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடூரத் தாக்குதல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூங்காவில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண்களை நோக்கி அங்கிருந்த சில சிறுவர்கள் ஆபாசமான வார்த்தைகளைக் கூறிப் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளனர்.

இதனை அந்த இளம்பெண் தட்டிக்கேட்டபோது அந்தச் சிறுவர்கள் அவரது தோற்றத்தை வைத்து இன ரீதியான வசைச்சொற்களைக் கூறி இழிவுபடுத்தியதுடன் அந்தப் பெண்களைக் கீழே தள்ளித் தாக்கியுள்ளனர். குறிப்பாக ஒரு சிறுவன் தனது இடுப்பு பெல்ட்டைக் கழற்றி அடித்ததில் அந்த மணிப்பூர் இளம்பெண்ணின் முகம் மற்றும் காது பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது.

தங்களை விட்டுவிடுமாறு அந்தப் பெண்கள் கெஞ்சியும் விடாமல் தாக்கிய அந்தச் சிறுவர்கள் காவல்துறை வருவதற்குள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்த பெண்களை மீட்ட காவல்துறையினர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய ஏழாம் வகுப்பு மாணவர் உட்பட நான்கு சிறுவர்களைக் கைது செய்துள்ளனர்.

பிடிபட்டவர்களில் மூன்று பேர் பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்தியவர்கள் என்று தெரியவந்துள்ள நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற சிறுவர்களையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.