பாஜகவில் இருந்து விலகி சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த ரஞ்சனா நாச்சியார், தவெக தலைவர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் நிலைப்பாடு குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் விஜய் பெண்களுக்கான 13 அம்சத் திட்டங்களை அறிவித்த நிலையில், ரஞ்சனா நாச்சியார் அவரிடம் ஒரு காரசாரமான கேள்வியை எழுப்பியுள்ளார். “பெண்ணியம் பேசும் தவெக தலைவர் விஜயிடம் கண்ணியம் உள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ள அவர், “பிறர் குழந்தைகளுக்குத் தாய்மாமனாக இருந்து சீர் கொடுப்பதற்கு முன்பாக, தான் பெற்ற குழந்தைகளுக்கு ஒரு பொறுப்பான தகப்பனாக இருப்பது மிக முக்கியம்” என்று விஜய்க்கு நேரடியாக அட்வைஸ் கொடுத்துள்ளார்.

விஜய்யின் விவாகரத்து விவகாரம் மற்றும் குடும்பப் பிரச்சனைகள் நீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே தனது தலைவரை இப்படிப் பகிரங்கமாக விமர்சித்திருப்பது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.