அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன் நகரப் பேருந்துகளில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தவிர, வீடில்லாத ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும், நிறுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

​மேலும், திருமணக் கோலத்தில் இருக்கும் மணமகன் மற்றும் மணமகளுக்கு அரசு சார்பில் பட்டு வேட்டி மற்றும் பட்டுச் சேலைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில், குறிப்பாகக் கொரோனா போன்ற இக்கட்டான சூழலிலும் அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் நலனை முன்னிறுத்தி இந்த மெகா திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று தேர்தல் பரப்புரையில் ஆவேசமாகப் பேசினார்.