2026 டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் இந்தியாவிடம் தோற்று வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்கள், கடந்த ஆறு நாட்களாக கொல்கத்தாவில் சிக்கித் தவிக்கின்றனர். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக சர்வதேச வான்வெளியில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம்.

தங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், வான்வழிப் போக்குவரத்து அனுமதிகள் இன்னும் கிடைக்காததால் அவர்கள் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர்.

இதற்கிடையில், “6-வது நாள்” எனத் தனது ஆதங்கத்தைச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயிற்சியாளர் டேரன் சமியை, “நீங்கள் சொகுசு ஹோட்டலில் சகல வசதிகளுடன் தானே இருக்கிறீர்கள்” என ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.

வீரர்களின் பாதுகாப்பு கருதி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் இணைந்து மாற்று ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. வான்வெளிச் சூழல் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், இறுதி அனுமதி கிடைத்தவுடன் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் புறப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“>

 

வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் பத்திரமாகத் திரும்புவதை உறுதி செய்ய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.