இன்று, மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர்-8 சுற்றிலிருந்து இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி வரை வருண் சக்கரவர்த்தி அதிக ரன்களை வாரி வழங்கியுள்ளார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்து வெறும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்தது அவர் மீதான விமர்சனத்தை அதிகரித்துள்ளது.
இது குறித்து தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சு உத்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் வருணின் பந்துவீச்சை எளிதாகக் கணித்து விளையாடுவதாகவும், குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களுக்கு ‘ரவுண்ட் தி விக்கெட்’ முறையில் பந்துவீசுவதை அவர் தவிர்க்க வேண்டும் என்றும் அஷ்வின் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டிகளிலும் வருண் அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருப்பதால், இறுதிப் போட்டியில் அவருக்குப் பதிலாக வேறு வீரரைச் சேர்க்க வேண்டுமா என்ற விவாதம் தற்போது எழுந்துள்ளது.
