டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தாலும், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவின் ஆட்டம் கவலையளிக்கும் வகையில் உள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், மீண்டும் ஒருமுறை ஆஃப் ஸ்பின்னரிடம் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இது குறித்துப் பேசிய முகமது ஆமீர், “இருதரப்பு தொடர்களுக்கும் ஐசிசி தொடர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.
ஐசிசி தொடர்களில் ஒவ்வொரு வீரரின் பலவீனத்தையும் எதிரணிகள் முன்கூட்டியே கணித்துத் திட்டம் தீட்டுவார்கள். அபிஷேக் சர்மா ஆஃப் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் திணறுவதை எல்லா அணிகளும் இப்போது கண்டுபிடித்துவிட்டன” என்று கூறியுள்ளார்.
மேலும், “வேகப்பந்து வீச்சாளர்கள் இப்போது அபிஷேக் சர்மாவின் உடலை நோக்கிப் பந்து வீசத் தொடங்கியுள்ளனர். ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு எதிராக அவர் தடுமாறுவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு வீரர் ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் ஜொலிக்க வேண்டுமென்றால், அவர் டெக்னிக்கலாக மட்டுமின்றி மனதளவிலும் மிகவும் பலமாக இருக்க வேண்டும்” என ஆமீர் அறிவுறுத்தியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவுக்குப் பதில் ரிங்கு சிங் களமிறங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஆமீரின் இந்த விமர்சனம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
