தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் விஜய், பெண்களுக்கான பல்வேறு அதிரடித் திட்டங்களை தனது தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்துள்ளார்.
ஆனால், இந்தத் திட்டங்கள் அனைத்தும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது அம்மாநிலத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்களின் ‘ஜெராக்ஸ்’ போலவே இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
குறிப்பாக, ஆந்திராவில் தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ₹1,500 வழங்கும் ‘ஆடாபிடா நிதி’ திட்டத்தைப் போலவே, தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 வழங்கும் ‘மதிப்புமிகு மகளிர்’ திட்டத்தை விஜய் அறிவித்துள்ளார்.
அதேபோல், ஆந்திராவில் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ₹15,000 வழங்கும் ‘தல்லிக்கு வந்தனம்’ திட்டத்தின் பாணியிலேயே, ‘காமராஜர் கல்வி உரிமைத் திட்டம்’ என்ற பெயரில் பெற்றோர்களுக்கு ₹15,000 வழங்கும் வாக்குறுதியையும் அவர் கொடுத்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இலவச சிலிண்டர் திட்டமான ‘தீபம் 2.0’-ஐப் பின்பற்றி ‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தையும், இலவச பேருந்துப் பயணத் திட்டமான ‘ஸ்த்ரீ சக்தி’-யைப் பின்பற்றி ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தையும், பெண்கள் பாதுகாப்புப் படையான ‘சக்தி டீம்ஸ்’-ஐப் பின்பற்றி ‘ராணி வேலுநாச்சியார் படை’ திட்டத்தையும் விஜய் அறிவித்துள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை மாநிலத்தின் வெற்றிகரமான திட்டங்களை விஜய் கையில் எடுத்திருப்பது, அவரது தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கப்பட்டாலும், இது ‘காப்பி பேஸ்ட்’ அரசியல் என சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்கள் எழுந்து வருகின்றன.
