2026-ஆம் ஆண்டுக்கான ஹுருன் உலகப் பணக்காரர்கள் பட்டியலின்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்தியாவிலும் ஆசியாவிலும் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். கடந்த ஓராண்டில் அவரது சொத்து மதிப்பு சுமார் 9 சதவீதம் உயர்ந்து ரூ. 9.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இப்பட்டியலில் கௌதம் அதானி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் கடந்த ஆண்டின் சவால்களால் அதானியின் சொத்து மதிப்பு சுமார் 14 சதவீதம் சரிவடைந்து ரூ. 7.5 லட்சம் கோடியாக உள்ளது. இவர்களைத் தொடர்ந்து எச்.சி.எல் நிறுவனத்தின் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ரூ. 3.2 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
இதனால் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் இந்த ஆண்டு மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனர் சைரஸ் பூனாவாலாவின் சொத்து மதிப்பு 44 சதவீதம் உயர்ந்து ரூ. 3 லட்சம் கோடியை எட்டியுள்ளது, இதன் மூலம் அவர் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் பில்லியனர்களின் எண்ணிக்கை 308-ஆக உயர்ந்துள்ளது, இது இந்தியாவை உலக அளவில் மூன்றாவது பெரிய பில்லியனர் மையமாக மாற்றியுள்ளது. மும்பை நகரம் தொடர்ந்து இந்திய பில்லியனர்களின் தலைநகராகத் திகழ்கிறது. சுகாதாரம், வாகன உற்பத்தி மற்றும் எரிசக்தி போன்ற துறைகள் இந்தியாவில் புதிய செல்வந்தர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றன.
