பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ள ஒரு கொடூரக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.

சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் ஐந்து துண்டுகளாக வெட்டப்பட்டு சோள வயல்களிலும் நீர்நிலைகளிலும் வீசப்பட்டுள்ளது. சனிக்கிழமை காலை வயலுக்குச் சென்ற கிராம மக்கள், சிதறிக் கிடந்த உடல் பாகங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நான்கு உடல் பாகங்களை மீட்ட நிலையில், தலை மட்டும் இன்னும் கிடைக்காதது பெரும் சோகத்தையும் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் அடையாளத்தை மறைப்பதற்காகத் தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றிருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். மீட்கப்பட்ட ஒரு மணிக்கட்டில் இருந்த கைக்கடிகாரத்தை வைத்து அந்த இளைஞர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் தடயவியல் நிபுணர்களும் மோப்ப நாய் படையும் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், இந்தச் சம்பவம் நடந்து மூன்று நாட்கள் இருக்கலாம் என்றும், திட்டமிட்டே இந்தக் கொலை அரங்கேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அடையாளம் தெரியாத இந்த இளைஞரின் தலை எங்கே? கொலையாளிகள் யார்? என்பது குறித்துப் பக்கத்து மாவட்ட காவல் நிலையங்களிலும் காணாமல் போனவர்கள் பட்டியலை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.