கர்நாடக மாநிலம் மைசூரு சுபாஷ் நகரைச் சேர்ந்த 44 வயது மருத்துவர் சையது அகமது சலீம் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மைசூரு மருத்துவக் கல்லூரியில் தங்கி மேற்படிப்பு படித்து வந்த இவருக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
நீண்ட நாட்களாகக் குழந்தை இல்லாத காரணத்தால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட இந்தத் தம்பதியினர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர். இருப்பினும் தத்தெடுத்த குழந்தையை வளர்த்தாலும் தனக்கு என்று ஒரு குழந்தை இல்லையே என்ற ஏக்கம் அந்த மருத்துவரை நீண்ட காலமாக வாட்டி வந்துள்ளது.
இந்நிலையில் ரம்ஜான் நோன்புக்காகச் சுபாஷ் நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்திருந்த சையது அகமது சலீம் இரவு தனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டிக் கொண்டார். மறுநாள் காலை வெகுநேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்துத் தகவல் அறிந்து வந்த என்.ஆர். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
