மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ‘ஸ்ட்ரெய்ட் ஆஃப் ஹார்முஸ்’ கடல் வழிப்பாதை மூடப்படலாம் என்ற அச்சங்களுக்கு இடையே, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மிகவும் வலுவாக இருப்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

கச்சா எண்ணெய், எல்.பி.ஜி மற்றும் எல்.என்.ஜி  ஆகியவற்றின் கையிருப்பு போதுமான அளவு இருப்பதாகவும், இந்த இருப்பு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிசக்தி விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளுடன் மாற்று ஏற்பாடுகள் குறித்து இந்தியா பேசி வருகிறது. மேலும், கத்தாரைச் சார்ந்திருப்பதை குறைத்து அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துடன் புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருவதால், எரிசக்தி இறக்குமதியில் இந்தியா பாதுகாப்பான நிலையில் உள்ளது.

இருப்பினும், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 50 சதவீதமும், எல்.பி.ஜி விநியோகத்தில் 85 சதவீதமும் இந்த ஹார்முஸ் கடல் வழியாகவே வருவதால் சந்தையில் ஒருவித கவலை நீடிக்கிறது.

சமீபகாலமாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறைந்து, மீண்டும் மத்திய கிழக்கு நாடுகளை இந்தியா அதிகம் சார்ந்திருக்கத் தொடங்கியுள்ளது இதற்கு முக்கிய காரணமாகும்.

இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வரும் மத்திய அரசு, ஒரு நாளைக்கு இரண்டு முறை எரிசக்தி நிலவரத்தை ஆய்வு செய்கிறது. மேலும், கடல் வழிப் பயணத்தில் ஏற்படும் அபாயங்களைக் குறைக்க கப்பல் காப்பீடு தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.