விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன்’ (MILAN 2026) கூட்டு கடற்படைப் பயிற்சியை முடித்துவிட்டுத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS தேனா’, இலங்கையின் காலி அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் டார்பிடோ (Torpedo) மூலம் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தின் போது இந்தியா ஏன் உதவவில்லை என்ற விமர்சனங்களுக்கு இந்தியக் கடற்படை தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. மார்ச் 4-ம் தேதி காலை தகவல் கிடைத்த அடுத்த கணமே, இந்தியக் கடற்படை தனது நீண்ட தூர ரோந்து விமானங்களையும், ஐஎன்எஸ் தரங்கினி (INS Tarangini) மற்றும் ஐஎன்எஸ் இக்ஷக் (INS Ikshak) ஆகிய போர்க்கப்பல்களையும் மீட்புப் பணிக்காக அனுப்பி வைத்ததாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

சுமார் 130 மாலுமிகளுடன் சென்ற இந்த கப்பலில் இருந்தவர்களை மீட்கும் மனிதாபிமான முயற்சியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் கௌரவ விருந்தினராக வந்த கப்பல் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதல் ஒரு கடல்சார் அட்டூழியம்; இதற்கு அமெரிக்கா வருத்தப்படும்” என அவர் எச்சரித்துள்ளார். சர்வதேசக் கடற்பரப்பில் நடந்த இந்தத் துணிகரத் தாக்குதல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.