ஒரு வழியாகப் போராடி நல்ல வேலை கிடைத்து, அந்தப் பணியில் சேரும் முதல் நாளிலேயே ஒருவர் ராஜினாமா செய்தால் எப்படி இருக்கும்? அப்படியொரு விசித்திரமான அனுபவத்தைத் தான் நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு எச்.ஆர் (HR) அதிகாரி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த நிறுவனத்தில் ஒரு முக்கியப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்ட ஊழியருக்காக, அந்த எச்.ஆர் சுமார் இரண்டு மாதங்கள் காத்திருந்துள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் அந்த ஊழியர் முதல் நாள் வேலைக்கு வந்தபோது, எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால், நிறுவனத்தின் சார்பில் அவருக்கு அதிகாரப்பூர்வ லேப்டாப் (Laptop) வழங்கப்பட்டபோதுதான் அந்த ‘ட்விஸ்ட்’ அரங்கேறியுள்ளது.
தனது சொந்த லேப்டாப்பையே பயன்படுத்துவதாக அந்த ஊழியர் கூற, நிறுவன விதிகளின்படி அதற்கு எச்.ஆர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு அன்றைய நாள் முடிவில், “இரண்டு லேப்டாப்களை வீட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது” எனக் கூறிவிட்டுச் சென்ற அந்த நபர், அன்றிரவே தனது வேலையை ராஜினாமா செய்வதாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த நபர் ஒரே நேரத்தில் இரண்டு நிறுவனங்களில் வேலை செய்யத் திட்டமிட்டிருக்கலாம் என்றும், நிறுவனத்தின் லேப்டாப்பை வாங்கினால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில்தான் ஓட்டம் பிடித்திருக்கலாம் என்றும் அந்த எச்.ஆர் சந்தேகிக்கிறார்.
“இப்படிப்பட்ட ஆட்களையும் சமாளிக்க வேண்டியிருக்கே” என அவர் பதிவிட்டுள்ள இந்த போஸ்ட், தற்போது கார்ப்ரேட் உலகில் செம வைரலாகி வருகிறது.
