சீனா தனது ராணுவத்திற்காகச் செலவிடும் தொகையை 275 பில்லியன் டாலராக உயர்த்தியுள்ளது. அந்நாட்டுப் பிரதமர் லி கியாங் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது சுமார் 2.5 பில்லியன் டாலர் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ராணுவத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் நாடுகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது.
போர் தளவாடங்களை நவீனப்படுத்துதல் மற்றும் ராணுவக் கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக இந்த கூடுதல் நிதி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் சீனா எடுத்துள்ள இந்த முடிவு சர்வதேச அளவில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டிலும் தனது ராணுவ பட்ஜெட்டை சீனா 7.2 சதவீதம் உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் சீனா தனது ராணுவ பலத்தைப் பெருக்கி வருவது இந்தியா உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளுக்குப் பாதுகாப்பு ரீதியாகப் பெரும் சவாலாக அமையும் என்று பாதுகாப்புத் துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கை ஆசியப் பிராந்தியத்தில் புதிய ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று அஞ்சப்படுகிறது.
