மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மறைவுக்கு இந்திய அரசு தனது அதிகாரப்பூர்வ இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, புது தில்லியில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு வியாழக்கிழமை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் குறிப்பேட்டில் இந்திய அரசின் சார்பில் தனது இரங்கல் செய்தியைப் பதிவு செய்து கையெழுத்திட்டார்.

ஈரானிய தூதரைச் சந்தித்த விக்ரம் மிஸ்ரி, இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொண்டதோடு, இப்பிராந்தியத்தில் நிலவும் சூழலுக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களின் போது காமேனி உயிரிழந்தது, அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது. இந்தச் சவாலான நேரத்தில், ஈரானியத் தலைமைக்கும் அந்நாட்டு மக்களுக்கும் இந்தியா தனது ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது.

இதனிடையே, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்திற்குப் பிறகு, மேற்கு ஆசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் அங்குள்ள நிலவரங்களை இந்தியா கூர்ந்து கவனித்து வருகிறது

காமேனியின் மறைவைத் தொடர்ந்து ஈரானில் 40 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ நெருக்கடி மற்றும் பிராந்திய உறுதியற்ற தன்மைக்கு மத்தியில், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியாக அமைதியை நிலைநாட்ட இந்தியா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவின் வலிமையைக் காட்டுகிறது.