அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த இறக்குமதி வரி அரசியலமைப்புக்கு விரோதமானது எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.10 லட்சம் கோடி) தொகையை வட்டியுடன் திருப்பித் தர உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 10% முதல் 18% வரை டிரம்ப் வரி விதித்தார். இதற்காக அமெரிக்காவின் சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தை (IEEPA) அவர் பயன்படுத்தியிருந்தார்.

இந்த வரி விதிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி முக்கியத் தீர்ப்பை வழங்கியது. வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உண்டு என்றும், அதிபருக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் கூறி டிரம்ப் அரசின் நடவடிக்கையை அரசியலமைப்புக்கு விரோதமானது என நீதிமன்றம் அறிவித்தது.

இந்தத் தீர்ப்பின் தொடர்ச்சியாக, மன்ஹாட்டனில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றம் டிரம்ப் அரசுக்குக் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட சுமார் 130 பில்லியன் டாலர் தொகையை இறக்குமதியாளர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.

அசல் தொகையுடன் மட்டுமல்லாமல், வரி வசூலிக்கப்பட்ட நாள் முதல் கணக்கிட்டு வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என நீதிபதி ரிச்சர்ட் ஈடன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தின் இந்த முடிவால் அமெரிக்காவில் உள்ள சுமார் 3 லட்சம் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர்கள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பிப்ரவரி 24 முதல் ‘பிரிவு 122’ என்ற மற்றொரு சட்டத்தைப் பயன்படுத்தி உலக நாடுகளின் இறக்குமதிப் பொருட்கள் மீது தற்காலிகமாக 10% வரியை டிரம்ப் அரசு தொடர்ந்து வசூலித்து வருவது குறிப்பிடத்தக்கது.