சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற “எது அரசியல்?” என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் நிலவும் பணநாயகத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அரசு தனது வாக்குகளை உறுதி செய்வதாகவும், இது மக்களின் உரிமைகளைப் பறிக்கும் செயல் என்றும் அவர் சாடினார்.

மேலும் திராவிட மற்றும் தேசியக் கட்சிகள் அனைத்தும் வண்ணங்களில் மாறினாலும் கொள்கையில் ஒன்றாகவே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாம் தமிழர் கட்சி மட்டுமே எந்தக் கூட்டணியும் இன்றி மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து வருவதாகப் பெருமிதத்துடன் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் சிறு தொகைக்காக விற்பனை செய்வது, நாட்டை விற்பனை செய்வதற்குச் சமம் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் “யாருக்கு ஓட்டு போட்டால் நாடும், மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதைச் சிந்தித்து வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்த சீமான், தமிழகத்தில் ஒரு நல்லாட்சி மலர வேண்டும் என்று உண்மையாக விரும்புபவர்கள் தங்களை ஒருபோதும் கைவிட மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தல் களம் மாற்றத்திற்கான ஒரு முக்கியப் புள்ளியாக அமையும் என்றும், கூட்டணி இன்றி எப்படி வெற்றி பெறப் போகிறோம் என்று கேட்பவர்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார்.