பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 35 வயது மதிக்கத்தக்க மென்பொருள் பொறியாளர் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் சுஷ்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெல் நிறுவனத்தில் முன்பு பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் செய்வது மற்றும் வீட்டுப் பொறுப்புகள் தொடர்பாக சுஷ்மாவிற்கும் அவரது மாமியார் கல்பனாவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதமே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று முதற்கட்டக் காவல்துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மரணம் தொடர்பாக சுஷ்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அவரது கணவர் புனீத் குமார் மீது வரதட்சணை கொடுமை மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுஷ்மாவின் மாமியார் கல்பனா அவரைச் சமையலறைக்குள் நுழைய விடாமல் தடுத்து மன ரீதியாகத் துன்புறுத்தி வந்ததாகத் தொடர் புகார்கள் எழுந்துள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதியினருக்கு நான்கு வயதில் ஒரு மகன் உள்ளான். இந்நிலையில் தலைமறைவாக உள்ள மாமியார் கல்பனாவைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
