சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில், இளம்பெண்களை ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காசிமேடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் அந்த உணவகத்திற்குச் சாப்பிட்டுச் சென்றபோது, அங்கு பணிபுரிந்த வாலிபர் ஒருவர் தனது செல்போன் மூலம் அந்தப் பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்ததை கவனித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், அந்த வாலிபரின் செல்போனை வாங்கிச் சரிபார்த்தபோது, அதில் பல பெண்களின் புகைப்படங்கள் ரகசியமாக எடுக்கப்பட்டு சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், அந்த வாலிபரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

பின்னர் இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் என்ற அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்களின் தனியுரிமைக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.