நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் கஞ்சா போதைக் கும்பல் நடத்திய வெறிச்செயலில் இருவர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பத்து பகுதியில் நேற்றிரவு சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல் திடீரென கொடூரத் தாக்குதல் நடத்தியது. அரிவாள் மற்றும் ஆயுதங்களால் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் இருவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் இருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரட்டை கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு கருதி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரியிலிருந்து ஏர்வாடி வழியாக வள்ளியூர் செல்லும் வாகனங்கள் இரண்டாவது நாளாக இன்றும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதற்கிடையே, குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி நாங்குநேரி – களக்காடு சாலையில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு தென்மண்டல ஐஜி மற்றும் நெல்லை சரக டிஐஜி ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் நேரில் ஆய்வு செய்து, போலீஸாருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, இச்சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நாங்குநேரி அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் அவர்களிடம் ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கஞ்சா விற்பனை மற்றும் போதைக் கும்பலின் அட்டூழியத்தை ஒடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
