அமெரிக்கா – ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் பதிவிட்ட ஒரு கருத்து இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை ஈரான் ஊடகங்கள் உறுதி செய்துள்ள சூழலில், சஹால் தனது பக்கத்தில், “நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ அந்த நாட்டுக்கு ஆதரவு கொடுங்கள், இல்லையென்றால் நீங்கள் எந்த நாட்டை ஆதரிக்கிறீர்களோ அங்கேயே போய் வசிக்கத் தொடங்குங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
— Yuzvendra Chahal (@yuzi_chahal) March 2, 2026
அவர் நேரடியாகப் போரைப் பற்றிக் குறிப்பிடவில்லை என்றாலும், உலகமே போர்ப் பதற்றத்தில் இருக்கும் வேளையில் இந்தப் பதிவு தேசப்பற்று மற்றும் விமர்சனம் என இரண்டு விதமான விவாதங்களை உண்டாக்கியுள்ளது.
இதற்கிடையில், இந்தப் பதிவால் அதிருப்தி அடைந்த இந்திய வீரர்கள் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் சஹாலை இன்ஸ்டாகிராமில் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்துவிட்டதாகத் தகவல்கள் பரவின.
ஆனால், இது வெறும் வதந்தி என்றும், அவர்கள் இருவரும் இன்னும் சஹாலை பின் தொடர்வதாகவும் உண்மைத் தன்மையை ஆராய்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்ப் பதற்றமான சூழலில் விளையாட்டு வீரர்களின் இத்தகைய பதிவுகள் உலக அளவில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.
