அதிமுக பிளவுபட்ட பிறகு ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில், தினகரன் தனித்து இயங்கி வருகிறார்.

இந்தச் சூழலில், ஓ. பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்ததைச் சுட்டிக்காட்டிய சசிகலா, அது மிகுந்த துரதிருஷ்டவசமானது என்றும், அதிமுகவின் அழிவுக்காலம் தொடங்கிவிட்டது என்றும் விமர்சித்திருந்தார்.

மேலும், அதிமுகவின் சீனியர் தலைவரான செங்கோட்டையன், தவெகவில் இணைந்திருப்பதும், மற்ற முக்கிய நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியமாவதும் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த அரசியல் மாற்றங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள சசிகலா, செங்கோட்டையன் எடுத்திருக்கும் முடிவு குறித்து தனது ஆதரவான நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், “செங்கோட்டையன் எதிரிகளிடமோ அல்லது துரோகிகளிடமோ செல்லவில்லை; மாறாக அவர் புதியதொரு பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவருடைய இந்த முடிவு சரியான ஒன்றுதான்” என்று அவருக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அதிமுகவில் நிலவும் தொடர் குழப்பங்களுக்கு மத்தியில் சசிகலாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.