உத்தரப் பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பள்ளிப் பேருந்தின் தளம் உடைந்து அதன் ஓட்டை வழியாகக் கீழே விழுந்த எட்டு வயது சிறுமி பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிர்ஹார் கிராமத்தைச் சேர்ந்த அனன்யா என்ற அந்தச் சிறுமி தனது பத்து வயது அண்ணனுடன் பள்ளி முடிந்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே இருந்த தளம் திடீரென உடைந்ததால் அந்தப் பெரிய ஓட்டை வழியாகச் சிறுமி ஓடும் பேருந்திலிருந்து கீழே விழுந்தார். இதைக் கண்டு அவரது அண்ணன் கூச்சலிட்டும் ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவதற்குள் பின்சக்கரம் சிறுமியின் மீது ஏறியதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

இந்த விபத்துக்குப் பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே முக்கியக் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான அந்தப் பேருந்து மிகவும் பழமையானதாகவும் தளம் முழுவதும் துருப்பிடித்த நிலையிலும் இருந்துள்ளது. அனன்யா அமர்ந்திருந்த இருக்கைக்குக் கீழே ஏற்கனவே பெரிய ஓட்டை இருந்தும் சுமார் நாற்பது குழந்தைகளை அந்தப் பேருந்தில் பள்ளி நிர்வாகம் தினமும் ஏற்றிச் சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பேருந்தை அடித்து நொறுக்கியதுடன் ஓட்டுநரையும் பிடித்துத் தாக்கினர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் பேருந்து ஓட்டுநரைத் தற்போது கைது செய்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.